Tuesday, November 25, 2008

பழக்கூடை

ஐக்கிய அரபு நாட்டில் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகம், குறிப்பாக கேரளா மாநிலத்தவர்கள் அதிகமாக வாழ்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் எவ்வளவு சதவிகிதம் இருப்பார்கள்? சமீபத்தில் இதற்கான விடை கிடைத்தது... பார்த்ததும் மலைத்துப்போனேன் !! (அம்மாடியோவ்.. இத்தினி பேரா ??) .

நீங்களும் பாருங்கள்.உள்நாட்டு மக்களைவிட மூன்று மடங்கு இருக்கிறார்கள். டவுன்பஸ் புடிச்சி வந்துருவாங்களோ!! பழக்கூடையில் இது திராட்சைக்கொத்து (Numbers அதிகமா இருக்கும்ல அதான்!)


--------------==========**********==============-----------------

என்னதான் பொருளாதார பிரச்சினைகள் வந்தாலும், வேலையில்லா திண்டாட்டம் வந்தாலும் போனாலும், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்கவே முடியாது. கண்டிப்பாக!! பொறுமை!! பொறுமை!! அதற்குள் ஆச்சர்யப்படாதீர்கள்.

மக்கள்தொகை வளர்ச்சியில்தான் !! கூடிய விரைவில் சீனர்களை ஓரம்கட்டிவிட்டு முதலிடத்தை அடைந்துவிடுவோம் (ம்க்கும்... இதெல்லாம் அரைச்ச மாவுதானே என்ன புதுசு??) !!

அந்த சாதனையோடு பார்வையற்றோர் எண்ணிக்கையிலும் முதலிடம் பிடித்துவிடுவோம் என்பது வருத்தத்திற்குரியது. அதைத்தடுக்கும் வழியை நண்பர் நந்தா அனுப்பினார்(அவருக்கு நன்றி!!)
.


இந்தியாவின் மக்கள்தொகை : 110 கோடி

தினமும் பிரப்போரின் எண்ணிக்கை : 86,853

தினமும் இறப்போரின் எண்ணிக்கை : 62,389
பார்வையற்றோரின் எண்ணிக்கை : 6,82,497


இறப்பவர்களின் கண்கள் தானம் செய்யப்பட்டால், வெறும் பத்து நாட்களில் அனைவருக்கும் பார்வை கிடைத்துவிடும். நல்ல விசயம்தானே, உடனே செய்துவிடலாமே.
இவ்வளவு சுலபமா? அதுதான் இல்லை!

கொஞ்சம் அலசினால், பல தடைகள் கண்முன்னே தலைவிரித்தாடும். தானம் செய்யும் வழிமுறைகள் என்ன என்பது, மிகக்குறைவான தொகுதியினருக்கே தெரியும். இது குறித்த சட்டங்கள் என்னென்ன? இருந்தால், ஏதாவது சிக்கல்கள் உண்டா? இவை அனைத்திற்கும் மேல், மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை! "எந்த கடவுளும் பிறருக்கு தானம் செய்வது தவறு எனக்கூறியதில்லை. "


ஹித்தேந்திரனுக்கு பிறகு மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் பற்றிய தெளிவு கூடியிருக்கிறது. இருப்பினும் முழுமையான விழிப்புணர்ச்சி இல்லை. இதற்கு உதாரணம் "சமீபத்தில் உயிருடன் இருக்கும் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்ததுதான்".


மருத்துவத்துறையில் இந்தியா வெளிநாட்டவர்கள் கூட தேடிவந்து பார்க்குமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் மிகுதியாக உள்ளன. இந்த மருத்துவமனைகள் ஊரெங்கும் விளம்பரப் பலகைகள் மற்றும் சாலை தடுப்புகளில் விளம்பரம் செய்கிறார்கள். இவற்றுடன் உடல் உறுப்பு தானம் பற்றிய வழிமுறைகளையும் சேர்த்து உதவவேண்டும்.

உயிரிழப்பு நிகழும் அந்த கடினமான நேரத்தில் தானத்தைப்பற்றிய நடவடிக்கைகள் செய்வது மிகசிரமான ஒன்றுதான் என்றாலும், அப்படி தானம் செய்வதால் கிடைக்கும் பயனோ மிகவும் பெரியது. பழக்கூடையில் இது பழாப்பலம்.!!
--------------==========**********==============-----------------

அதிகமான் வில்லனாக நடித்துக்காட்டு என யாரைக்கேட்டாலும் உடனே அவர்கையைப் பிசைந்துகொண்டே "டேய் பக்கிரி, டேய் ரங்கா.! எல்லாரும் இங்கவாங்கடா..." என வசனம் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்குபிரபலமானவர் திரு.நம்பியார் அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் இவரை அனைவருக்கும் பிடிக்கும். திரைப்பட நிகழ்வுகள் நிழலா நிஜமா என பிரித்துப்பார்க்க தெரியாத மக்கள், அவர் திரையில் செய்யும் வில்லத்தனத்தைக்கண்டு கண்டபடி திட்டித் தீர்ப்பார்கள். "நம்பியார் கிட்ட புடிச்சி கொடுத்துருவேன், ஒழுங்கா சாப்பிடு" என குழந்தைகளை பயமுறுத்தக்கூட அவரை இழுப்பார்கள். அவற்றை நேரில்கண்ட அனுபவம் எனக்குண்டு.

ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதராகவே வாழ்ந்தார். அவரின் ஐய்யப்ப பக்தி அனைவரும் அறிந்தததே. வருடாவருடம் குருசாமியாக சபரிமலை சென்று வருவார். அவரின் மறைவு, இந்த பழக்கூடையில் பாகற்காய் !!

--------------==========**********==============-----------------

Saturday, November 15, 2008

"சோதனைகள்" ஆயிரம்

ஆயிரம் அல்ல பத்தாயிரம் என்று கூட சொல்லலாம்.

எதனால்? எல்லாம் இன்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த ஒரு சிறிய முடிவினால் வந்தது.
அப்படி என்ன முடிவு? வாரணம் ஆயிரம் திரைப்படம் பார்க்கச்செல்வது என்பதே!

அந்த மிகச்சிறந்த திரைப்படத்தை பற்றி எழுதாமல் தூங்குவதில்லை என்று 2:40am மணிக்கு மெனக்கெட்டு எழுதுகிறேன்.


ஆரம்பிக்குமுன் திருவாளர், ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகரான படங்களை தந்து பொதுச்சேவையாற்றும் இயக்குநர் திரு. கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ( சும்மா சொல்லக்கூடாது ஒவ்வொரு Frame-லயும் அசத்தரார்யா ???? ).


படம் வெளியான முதல் நாள். ஆதலால், திரை அரங்கிற்கு தொலைப்பேசியில் அழைத்து அமர்விடங்கள் இருக்கின்றன என்பதை உறுதி செய்துகொண்டோம். "காட்சி நேரம்" இரவு 10:30 மணி.இன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டத்தை எதிர்பார்த்து 8:30 மணிக்கெல்லாம் அரங்கிற்கு சென்று நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டோம். பின்னர் சென்று உணவருந்திவிட்டு சரியான நேரத்திற்கு திரும்பினோம்.

சரியான நேரத்தில் திரைப்படமும் துவங்கியது... ஒரு மணிநேரம் கழித்து அருகிலிருந்த நண்பன் கேட்டான் "மச்சி கதை எப்போ ஆரம்பிக்கும்?" என்று. கதைக்களம் பற்றிய முன்னோட்டம் சொல்வது போலவே காட்சிகள் முடிவில்லாமல் நகர்ந்ததுதான் காரணம்.

திரைப்படத்தில் இல்லாத கதையைபற்றயோ அல்லது ஒவ்வொரு காட்சியாகவோ இங்கே விமர்சிக்க விரும்பாததால் (முக்கியமா தூக்கம் சொக்குது!) பொதுவான கருத்துக்களை மட்டும் சொல்கிறேன்.

திரைப்படத்தின் கரு "தந்தை-மகன்" சொந்தம் பற்றியது என நினைக்கிறேன், அனால் அதற்கான முயற்சி திரைக்கதையில் துளிகூட காணோம்.
திரைப்படமே சூர்யாவின் Fashion Show போல மட்டுமே இருந்தது. பள்ளி மாணவன், நீளமுடி, அழுத்தமாக வெட்டியமுடி, தாடி வைத்த முகம், தாடி வைக்காத முகம், ஒல்லியான உடல், உடற்பயிற்சி செய்து மெருகேற்றிய உடல், வயதான உருவம், ராணுவ மேஜர் உடை... இதுபோல இன்னும்பல வேடங்கள். கதை ஏதும் இல்லாததால் இந்த்தனை வேடங்களும், சூர்யாவின் கடும் முயற்சியும் வீண்.

திரைக்கதையை இதற்குமேல் யாரும் குழப்ப முடியாது.. முடியவே முடியாது. ஒரு காட்சிக்கும் அடுத்ததுக்கும் ஒற்றுமையே இல்லை. ஒரு காட்சியில் தந்தைதான் இனி வாழ்க்கை என்கிறார். மறுகணமே புதிய காதல், உடனே போதைக்கு அடிமை. மறுகணம் அடிதடி பின் இராணுவம். (உஸ்ஸ்ஸ்...அப்அப்பா.... இப்பவே கண்ணகட்டுதே!!) இன்னும் நிறைய சொல்லலாம்.

திரைப்படத்தின் நடுவே சகிக்க முடியாத ரசிகர்களின் கதறல்கள் கேட்டன "அய்யா போதும், வலிக்குது விட்டுவிடுங்கள்", "இனிமே சினிமாக்கு கூட்டிட்டு வரவேமாட்டேன்" என்றெல்லாம்.


திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் சூரியாவின் உழைப்பு தெரிகிறது.. ஆனால் அத்தனையும் வீனடிக்கப்பட்டுவிட்டது.

(இல்ல... சும்மாதான் கேக்கிறேன், வருஷக்கனக்குல விழுந்து உருண்டு பிரண்டு படம் எடுக்கிறாங்க, கோடிக்கணக்குல செலவழிக்கிராங்கோ, அநியாயத்திற்கு விளம்பரம் செஞ்சு Hype கொடுக்கறாங்கோ, கதை திரைக்கதையப்பத்தி துக்குணூண்டு கூட யோசிக்கவே மாட்டாங்களா? )

திரைப்படத்தில் ஒரு மிகச்சரியான் வசனம் உள்ளது.. இப்படி மனம்நொந்து படத்தை பார்த்ததற்கு அதுவே மருந்தாகவும் அமையும் "Whatever happens, life has to go on" என்பதே.

இதற்கு மேல் எழுத ஒன்றுமில்லை.

நன்றி.


Thursday, November 13, 2008

தங்கமணி ஊருக்கு போயிட்டா (எப்படி இருக்கும்) ?


முதலில் Positives பார்ப்போம்.

கேள்வி கேட்க ஆள் இல்லாததால், நன்றாக ஊர் சுற்றலாம். ஓரிரு நாட்கள் வீட்டின்பக்கம் வராமலும் சுற்றலாம். நண்பர்களுக்காக நிறைய நேரம் ஒதுக்கலாம். வீட்டிலேயே பார்ட்டி வைக்கலாம். நமது சமையல் கைவண்ணத்தை நன்பர்களிடம் காட்டலாம். தொலைக்காட்சியில் அறுவை-நாடகங்கள் தவிர்த்து பிடித்த நிகழ்ச்சிகள் பார்க்கலாம். முக்கியமாக Sports மற்றும் English channels பார்க்கலாம்.

வீட்டில் தனியாக இருப்பதால் சண்டை சச்சரவு ஏதுமின்றி அமைதியாக இருக்கும். அலுவலகத்தில் வேலைநேரம் முடிந்தவுடன் "கிளம்பியாச்சா?" என்ற தொலைப்பேசி அழைப்பு இல்லாதலால் பணிகளை செவ்வனே முடித்து பனி-உயர்வு பெற முயற்சி செய்யலாம்.

இப்படி சிலபல விஷயங்களுக்கு சௌகர்யாம்தான்.


சரி, இனி Negatives என்னவென்று பார்ப்போம்

என்னதான் சந்தோசமாக ஊர் சுற்றினாலும், திரும்பி வந்து வீட்டின் கதவை திறக்கும்போது "யாருமில்லா வீட்டினுள் செல்லத்தான் வேண்டுமா?" என்ற எண்ணம். மீறி செல்லும்போது ஏற்படும் வெறுமையும் கோபமும்.
பணியிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்தவுடன் கிடைக்கும் புன்னகை கலந்த காபி (கிடைக்காது! ). கேண்டினில் சாப்பிடும்போது "பார்த்து பார்த்து செய்து கொடுப்பாளே! திரும்ப வர்ற வரைக்கும் இதுதானா?" என்ற சலிப்பு. அலுவலகப்பணியில் சிக்கலோ அல்லது வேறு கவலை ஏதுமிருந்தால், தோள்சாய்த்து ஆறுதல் கூற ஹூ...கும். தினமும் நிகழும் சிறுசிறு சண்டைகளும், கோபங்களும், ஆறுதல்களும் இன்றி தனிமையில் இருப்பது கொடுமை.

தனிமையிலே இனிமை காண முடியமா? முடியாது என்றே தோன்றுகிறது.

என்னதான் தினமும் இணையத்தின்மூலம் பேசினாலும், செய்திகளைப் பரிமாறிக் கொண்டாலும்...சிரமம் சிரமம்தான்.
உங்களுக்கு தோன்றும் Postives மற்றும் Negatives ஐ பின்னூட்டமிடுங்கள்

நன்றி !

Wednesday, November 5, 2008

சாதனை வாரம்

சைனா (Saina Nahiwal) இந்தியாவின் புதிய சாதனையாளர். ஆந்திரா ஹைதிராபாத் நகரைச்சேர்ந்த, பதினெட்டு வயதேயான இவர் சிறகுப்பந்தாட்ட(Badminton) விளையாட்டில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

மூன்று நாற்கள் முன்பு "World Junior Badminton Championship" போட்டியில் வெற்றிபெற்றார். இத்தகைய போட்டியில் இந்தியர் வெல்வது இதுவே முதல்முறை.

இது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்பதாலும், நான் ஓரளவுக்காவது விளையாடிய விளையாட்டு எம்பதாலும் (எதுக்கு இந்த விளம்பரம்??) இந்த செய்திமிகவும் மகிழ்ச்சியை தந்தது.


Gagan Narang :
இவர் சுடுவதில் வல்லவர் (அதில்லப்பா...துப்பாக்கி சுடுற போட்டியில !!).
தாய்லாந்து தலைநகர் பங்காக்கில் நடைப்பெற்ற உலகக்கோப்பைபோட்டியில் கலந்துகொண்டு 10 Metre Air Rifle பிரிவில் வென்று சாதனைசெய்துள்ளார்.

பி.கு இவரும் ஆந்திரா மாநிலம் ஹைதிராபாத் நகரைச்சேர்ந்தவரே !!

ஒருபுறம் ஒலிம்பிக்கில் தங்கம் இப்போது உலகக்கோப்பை !! ( நல்லாத்தான் சுடுறாங்க!! )

சச்சினும் டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தது அனைவரும் அறிந்தசெய்தி.இவர்கள் அனைவரையும் விட முக்கியமான சாதனையாளர் நம்ம சதுரங்கத்தின் உலக-நாயகன் ( சொல்லலாம்ல?) விஸ்வநாதன் ஆனந்த் தான். ஜெர்மனிநாட்டில் போன் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ருஸ்ய வீரர் விளாடிமிர் கிராம்னிக்கை (Vladimir Kramnik) வென்று சதுரங்கத்தில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார்.

எனக்கு சதுரங்கம் ஆடத்தெரியாது என்றாலும் ஆனந்த் பற்றிய செய்திகளை தேடிப்படிபேன். (ஒரு ஊர்க்காரப்பய பாசந்தான்!!)

ஆகமொத்தம் விளையாட்டை பொறுத்தவரை இந்த வாரம் சாதனை வாரம் !!!.