Wednesday, December 31, 2008

எங்கள் சுட்டி


குழந்தை வாய்ப்பேச பத்து மாதம்
ஆகும் என்கிறது அறிவியல்,
எங்கள் சுட்டி உரையாடுகிறான்
நான்காம் மாதத்திலேயே!

கவனிக்காதிருந்தால் நம்மை அழைப்பதும்
அருகில் சென்று வினாவினால்-
படுத்திருந்தது போதும் என்னை
மேலே தூக்கிக்கொள் என்பான்,
தூக்கியபின் வீட்டை சுற்றிக்காட்டு என்பான்,
நில்லாமல் நடந்துகொண்டே இருக்கவைப்பான்,
கை ஓய்ந்து படுக்கவைத்தால்
சுற்றியது போதாதென்பான்.
பசி என்பான், தூங்கவை என்பான்.
இன்னும் பல பேசிக்கொண்டே இருக்கிறான்,
முகபாவம் என்பதையே மக்கள் மறந்து வாழும்போது -
சந்தோசம், சிணுங்கல், சிரிப்பு, கொஞ்சல்,
கெஞ்சல், கோபம், அழுகை
என முகபாவங்களை தெளிவாகக்
காட்டிப் பேசுகிறான் எங்கள் சுட்டி.
நம்மிடம் மட்டுமல்லாது, விளையாட்டு
பொருட்களையும் நண்பனாய் பாவித்து பேசுகிறான்.

அனைத்தும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்ல,
குழந்தைகளால் மட்டுமே பேசக்கூடிய
அந்த தெய்வீக மழலை மொழியில்!





Monday, December 29, 2008

ஒரு கவளம்




நீ தட்டு நிறைய வகை வகையாக
பரிமாறிய உணவு நாவிற்கு மட்டும் சுவை;
ஆனால், கையில் கொடுத்த ஒரு கவளம்
மனதிற்குள் இனித்தது, திகட்டுமளவு!


Sunday, December 28, 2008

புத்தாண்டு நினைவுகள்

மார்கழிக் குளிர்
தெருக்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்
சென்னையில் "கலை" நிகழ்ச்சிகள் களைகட்டுதல்
தேய்பிறையில் டிசம்பர் மாதம்
இவை அனைத்தும் நமக்கு சொல்வது
ஆண்டின் இறுதியை நெருங்கிவிட்டோம் என்று.
புது வருடம் நமக்காக இன்பமும், துன்பமும்,
மர்மங்களும், மாற்றங்களும்,
பழைய வினாக்களுக்கு விடைகளும்
மேலும் பல புதிய வினாக்களையும்
தாங்கி வந்து கொண்டிருக்கிறது.


ஆங்கிலப் புத்தாண்டுகளை வரவேற்பதில் பலருக்கு பல கருத்துக்கள். என்னைப் பொறுத்தவரை ஆங்கில காலண்டர்'ஐயே நாம் பெரும்பாலும் உபயோகிப்பதால், ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பதில் தவறில்லை.

வரும் Dec'31 இரவில் என்ன செய்யப் போகிறோம் என சிந்திக்கும் முன், இதுவரை எனைக் கடந்த புத்தாண்டுகளில் என்னவெல்லாம் செய்தோம், யாருடன் எங்கு கொண்டாடினோம் என நினைவலைகளை புரட்டிப் பார்த்து அசைபோட்டுப் பார்த்தேன். ஒருவித மகிழ்வைத்தந்தது. அவற்றுள் குறிப்பிடும்படியான நிகழ்வுகள் மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

1992
என் நினையு சரியாக இருப்பின், புத்தாண்டு இரவு கேக் சாப்பிட்டு கொண்டாடியது 1992 க்குத்தான் (அப்போ நாங்க SSLC !). என்னுடைய அண்ணன்னும் ஒரு நண்பரும் புத்தாண்டு கொண்டாட்டங்களை பார்க்க சைக்கிளில் சென்றனர். ரோட்டில் கத்திக்கொண்டும் கலாட்டா செய்தும் செல்பவர்களை, காவலர்கள் லத்தியால் அடித்து விரட்டியதைப் பார்த்து, நல்ல பிள்ளையாக திருப்பூர் டவுன் ஹால் எதிரிலுள்ள சுகன்யா பேக்கரியில் ஹனி கேக் வாங்கிக்கொண்டு பத்திரமாய் வீடு திரும்பினர்.
இதில் நான் செய்தது கேக்'ஐ சாப்பிட்டது மட்டுமே..ஹிஹி.!! (யாரு, கூட்டமா கிளம்பி வர்றது...வேணாம்..!)



1998
வீட்டிற்கு வெளியில் சென்று நான் கொண்டாடிய முதல் புத்தாண்டு!

திருப்பூரிலிருந்து 20 கி.மி. தொலைவில் உள்ள கொடுவாயில் இருக்கும் நண்பனின் இடத்தில் கொண்டாடுவதென அழைத்துச் சென்றார்கள்.
ஊருக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றோம். தோட்டத்தின் நடுவே இருந்த சிறு வீட்டின் மும்பு காரை நிறுத்திவிட்டு காத்திருந்தோம் (இருட்டுக்குள்ள என்னதாண்டா செய்யப்போறோம்னு எனக்கு யோசனை!!) சிறிது நேரத்தில் மேலும் ஒரு காரில் நண்பனின் நண்பர்கள் வந்திறங்கினர். அறிமுகத்திற்கு பிறகு சட்டென அந்த காரின் டிக்கியை திறந்தனர். அஹா, பார்த்தால் ஒரு மினி பார் அளவிலான அயிட்டங்கள்!! காரில், பாட்டு சத்தமாக போடப்பட்டது, பார்ட்டி ஆரம்பமானது. அவரவருக்கு பிடித்த பானத்தை எடுத்துக் கொண்டனர். நானும் இன்னும் இரு நண்பர்களும் ஜூஸ் மட்டும் எடுத்துகொண்டோம் (ரொம்ப நல்லவனாக்கும், நெசமா!!). கொஞ்சம் கொஞ்சமாக சுருதி (பேச்சில்) ஏறியது, கலாய்ப்புக்களும், கிண்டல்களுமாக நகர்ந்தது. பரோட்டாவும் சிறு பக்கெட்டில் குருமாவும் உணவு! பொறுமையாக தட்டில் போட்டு குருமா ஊற்றி சிலர் சாப்பிட,ஒருவர் பரோட்டாவை எடுத்து.. அப்படியே குருமாவில் முக்கி சாப்பிட்டார் (ஓ..இது சுலபமான வழியா இருக்கே!!).

சிறிது நேரத்தில் நண்பர்களுக்கு சுருதி குறைய ஆரம்பித்தது. சரி, சீக்கிரமாக கிளம்பிவிடலாம் என தோன்றியது. அப்போது ஒருவர் மற்றவர்களிடன் "மச்சான், உனக்கு என்ன வேணும்டா சொல்லு நான் இருக்கேன்.. இந்த செயின் வேணுமா.. இந்தா வச்சுக்க, டேய்..இந்தாடா இந்த மோதிரத்த நீ வச்சுக்க.." என பேசியதோடு நிறுத்தாமல், நிஜமாகவே கழட்டி கொடுத்தார். நாங்களெல்லாம் அவரை சமாதானப்படுத்தி அருகிலிருந்த கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்தோம். கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார். அமைதிக்குப்பின் புயல் என்பது போல், திடீரென எழுந்தவர், பந்தல் தடுப்பை தாண்டிக் குதித்து ஓடினார். ஓடினவர் கம்பகாட்டுக்குள் நேராக ஓடினார். சிலர் அவரைத் துரத்திக்கொண்டு "அடப்பாவி டேய் அந்தபக்கதாண்ட கிணறு இருக்கு" என கத்திக்கொண்டே ஓடினர். "ஆஹா, புது வருஷம் நமக்கு காவல்நிலயத்துலதான் விடியும் போல" என பயந்தேன். நண்பர்கள் ஓடினவரை பத்திரமாக கொண்டுவந்தவுடன்தான் பயம்விட்டது. அவர்தான் தோட்டத்தின் சொந்தக்காரராம்!! ஏன் ஓடினார் என யாருக்கும் புரியவில்லை.

பார்ட்டி போதும்டா சாமி என கிளம்பினோம்.


மில்லேனியம்
சென்னைவாசியாகி இரண்டு ஆண்டுகள் முடிவடையும்நேரம் அது. அதற்குள் சென்னை பல புதிய நண்பர்களை கொடுத்திருந்தது. புத்தாண்டு இரவன்று, கீழ்ப்பாக்கத்தில் இருந்த பில்லியார்ட்ஸ் பாயிண்ட் (Billiards Point) சென்றோம். அங்கேயே, புதுவருட பிறப்பை பார்த்துவிட்டு நண்பர்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிவிட்டு பின்னிரவு இரண்டு மணிக்குமேல் கிளம்பி மெரீனா கடற்கரை சென்றோம். அந்த நேரத்திலும் சோர்வடையாது கூச்சலிட்டு வழ்த்திகொண்டிருந்தனர். வேடிக்கை பார்ப்பதில் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும், காவலர் இருவர் எங்களை நெருங்கி "கிளம்புங்கப்பா நேரமாச்சு, கொண்டாடுனவரைக்கும் போதும், கிளம்புங்க...!!" என்றார். சரி சார்..சரி..சார் "Happy New Year" சார் என்றோம். "எந்த பிரச்சனையும் இல்லாம, இங்க இருக்கிறவங்க பத்திரமா வீடுபோய் சேர்ந்தாதான்ப்பா எங்களுக்கு New Year" என்றார். நெகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

அடுத்த நிறுத்தம், எத்திராஜ் சாலையில் இருந்த சாமியானா ஹோட்டல்! (தற்போது இல்லை)
விடியற்காலை நான்கு மணிக்கு புத்தாண்டின் முதல் உணவாக தோசையும் காபியும்.



அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!


டிஸ்கி 1: ரொம்ப மொக்கை போட வேண்டாம்னு 2000 க்கு மேல எழுதலை.

Saturday, December 27, 2008

துபாய் பஸ் ஸ்டாண்ட் (ஸ்பெஷல்)

நேற்று காலை குடும்ப சகிதமாக துபாயிலுள்ள கோவிலுக்கு சென்றிருந்தோம். இந்நாட்டில் உள்ள ஒரேஒரு ஹிந்து கோவில் துபாய் நகரின் "பர் துபாய்" பகுதியில் இருக்கிறது. குளிரை பொருட்படுத்தாது காலை 6:45 மணிக்கெல்லாம் (ஷார்ஜாவில்) வீட்டை விட்டு இறங்கிவிட்டோம். சொல்லி வைத்தாற்போல் உடனே டாக்ஸி கிடைத்தது. வெள்ளிக்கிழமை ஆதலால் ரோடு காற்று வாங்கியது, பத்து நிமிடத்திற்குள் துபாய் நகரத்தினுள் இருந்தோம் (மாற்ற நாட்களில் இரண்டு மணிநேரம் ஆகுமாக்கும்!!). வழியில் மணிக்கூண்டில் வெப்பநிலை 15 டிகிரீ என்றது.

மணிக்கூண்டு (The popular Clock Tower)



கொசுறு: இருபது வருடத்திருக்கு முன் இப்படி இருந்தது ஓட்டுனரிடம் துபாய் அருங்காட்சியகத்திற்கு போகச்சொன்னோம். அதன் அருகில் கோவில் அமைத்துள்ளது. ஒரு கட்டிடத்தில் கிருஷ்ணர் கோவில் மற்றுமொரு கட்டிடத்தில் சிவன் கோவில் மற்றும் சீக்கியர் கோவில், அனைத்தும் வட இந்திய வழிமுறைப்படி இருக்கிறது.

இப்படியாக கோவிலுக்கு சென்றோம் வணங்கினோம். (பட் மேட்டர் என்னன்னா..)
அங்கே நம் பெரிய கவுண்டரை (பெ.) பார்த்தோம். அவருடன் இருந்த நேரத்தில் நிகழ்ந்தவை கீழே தொகுத்துள்ளேன்.

பெ.: "ஏனுங்க தம்பி நீங்க கோயம்பத்தூருங்களா" (கேட்டுக்கொண்டே நெருங்கினார்)

நான்: அட எப்பிடி கண்டுபுடிச்சீங்க?

பெ.: நம்மூர் பசங்கள பாத்தா தெரியாதுங்களா. (நெத்தியில ஒட்டியிருக்கோ?)
மகனுக்கு இங்கதான் வேலை, ரெண்டு வாரம் வந்துட்டு போங்கப்பான்னு நெறைய காசு செலவு செஞ்சு கூட்டீட்டு வந்துருக்கான். அவனுக்கு வேலை அதிகமா அதான் இப்போ வரலை. (அவர் கண்களில் மகனின் பெருமையும், பூரிப்பும் நெகிழ வைத்தது)

(அறிமுகமேலாம் முடிந்தபிறகு...)

பெ.: ஏனுங்க தம்பி நான் ஷார்ஜா போகோணும், இவத்தாலைக்கு இருந்து எப்பிடி போறது?

நான்: நாங்களும் ஷார்ஜா தான் போரோங்க. எங்க கூடவே வாங்க.

பெ.: சரிப்பா, அங்க ஊர்காரன் ஒருத்தன் இருக்கான், பாக்க போறேன்.
ஏனப்பா, கோயில்கிட்ட படகெல்லாம் இருக்குன்னாங்க எங்க?

நான்: கோயிலுக்கு பின்னாடி இருக்குங்க வாங்க போய் பார்த்துட்டு, அந்த பக்கமே உக்கார்ந்து பிரசாதத்தையும் (பூரி + சென்னா மசால்!! ) சாப்பிட்டுட்டு வரலாம்.

சென்ற பின்..

பெ.: அட..என்ன தம்பி, இவ்வளோ பெரிய ஆறு ஓடுது. பாலைவனத்துல எப்பிடிப்பா?
நம்ம பவானி ஆறு அளவுக்கு இருக்கே.

நான்: இது துபாய் கிரீக்'னு (Dubai Creek) சொல்வாங்க. கடல் தண்ணிய ஆறு மாதிரி திருப்பி விட்டிருக்காங்க. துபாய்க்கு அழகு சேர்க்கரதுல இது ரொம்ப முக்கியமானதுங்க.

இந்த சின்ன சின்ன படகாட்டமா இருக்கறதுல, இந்த ஊர்க்காசு ஒரு ரூபா குடுத்த அந்த பக்கமா கொண்டுபோய் விடுவாங்க. இதுக்கு பேரு ஆப்ரா (Abra). அது பத்தாம ஏசி படகு (Water Bus) விட்டிருக்காங்க அதுக்கு நாலு ரூபா.

ஆப்ரா படகுகள்



சொகுசு படகு (Water Bus)
(மேலும் கொஞ்சம் மொக்கை போட்டுக்கொண்டே பிரசாதம் சாப்பிடோம்)


நான்: கிளம்பலாங்களா?
பெ.: சரிப்பா... எப்பிடி போறதுன்னு சொல்லவே இல்ல?

நான்: பஸ்ல தாங்க.

பெ.: ஏனுங்க தம்பி பஸ்ஸா? துபாயில அதெல்லாம் இல்லைனாங்க.

நான்: நல்லாவே இருக்கு, பத்து நிமிஷம் நடந்தா பஸ் ஸ்டாண்ட் வந்துடும்.

(பழைய டெக்ஸ்டைல் மார்கெட் வழியாக நடந்து பஸ் ஸ்டாண்ட் சென்று அடைந்தோம் )





பெ.: பரவாயில்லை ரொம்ப பெருசாதான் இருக்கு. அனா எல்லாம் நம்மூர்க்காரங்களா இருக்காங்க.

நான்: அமாங்க, நம்ம நாட்டுக்காரங்கதான் இங்க அதிகம் வேலைக்கு வராங்க.


நான்: அங்க கடைசீல அடுக்குமாடி பஸ் தெரியுதுங்களா, அதுதான் ஷார்ஜா போற பஸ். ஆளுக்கு ஐஞ்சு ரூபா தான்.

பெ.: அடேங்கப்பா! இவ்வளோ கூட்டமா? ஏம்பா, வரிசைல நின்னா ரொம்ப நேரம் ஆகும் போல. (முழித்தார்!!) பொழுது சாயறதுக்குள்ள வந்து சேரணுமே.

பெ.: எல்லா பஸ்லயும் சன்னல வேற சாத்தீருக்காங்க.. இல்லன்ன துண்டை போட்டு சீட்டு புடிச்சிரலாம்.

(மேலும்..கவலையடைந்தார்)

நான்: கவலைப்படாதீங்க கவுண்டரே! லேடீஸ் கூட வந்தா, வரிசை எல்லாம் நிக்கவேண்டாம்..நேராபோய் ஏறிக்கலாம். அதுவும் எங்க குழந்தை வேற கைல இருக்கு..எங்க கூட வாங்க.

பெ.: அட, இது கூட நல்லாஇருக்கே.





(ஏறிக்கொண்டோம்...பஸ் கிளம்பியது.. இருபது நிமிடத்தில் அவருக்கான இடம் வந்ததும் இறக்கி விட்டோம்)

பெ.க: உங்கள பாத்ததுல சந்தோசம்ப்ப, ஊருக்கு வந்த கண்டிப்பா வீட்டுக்கு வாங்க, தென்னந்தோப்பு இருக்கு எளனி சாப்பிடலாம். (சொல்லிக்கொண்டே இறங்கிச்சென்றார்)


அவரைப்பார்ததில் எங்களுக்கும் சந்தோசம் என நினைத்துக்கொண்டே வீடு சேர்ந்தோம்.

முற்றும்.

டிஸ்கி 1: இதனால சகலமானவர்களுக்கும் அறிவிக்கறது என்னன்னா துபாயில பஸ் ஸ்டாண்ட் இருக்கு..இருக்கு..இருக்கு.!! (அப்ப விவேகானந்தர் குறுக்கு தெரு இருக்கான்னு கேட்டு டார்ச்சர் பண்ணக்கூடாது!).

டிஸ்கி 2: அனா "மீனா" பஜார் இருக்கு. ரொம்ப பிரபலம் கூட. மீனா எப்போ வந்தாங்கன்னுதான் தெரியலை

டிஸ்கி 3: துபாய் உள்ளூர் பஸ், எங்க ஏறி எங்க இறங்கினாலும் ரெண்டு ரூபா தான். ஒரு வாட்டி ரெண்டு மணி நேரம் போனோம்..அதுக்கும் ரெண்டு ரூபா தான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ரொம்ப நல்லவங்க..!

டிஸ்கி 4: ஆப்ரா படகுல தினமும் முப்பது ஆயிரம் பேர் பயணிக்கறாங்க.
(நம்ம தண்ணியில மிதக்கரா மாதிரி போறது ஒரு தனி சுகம் தான் போங்க)



Thursday, December 18, 2008

ஒரு ஆதங்கம் !

திருந்தவே மாட்டாங்களா?
திரும்பத்திரும்ப கண்முன்னால் விபரீதங்கள் நடந்தாலும் திருந்தவே மாட்டாங்களா?

சமீபத்தில் ஊருக்கு சென்றபோது, கோழிக்கோடு சென்று அங்கிருந்து வாடகைக் காரில் கோவை சென்றேன். கோழிக்கோட்டில் விமானம் இறங்கியவுடன் மகன் பிறந்த செய்தி கிடைத்தது...என் வருகைக்கு காத்திராமல் பிறந்த குழந்தை எப்படி இருக்கும்? தங்கமணி நலமா? என்பது போன்ற ஆர்வத்தில் சென்றுகொண்டிருந்தேன் ( சரி மேட்டருக்கு வர்ர்ரேன்!! )

வழியில்.. ஒரு மாருதி 800 காரை கடந்து சென்றோம். வண்டியின் ஓட்டுனரைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தேன். காரணம்? ஓட்டிகொண்டிருந்தது ஒரு பால் வடியும் 10 ~12 வயது சிறுவன்!! அருகில்..அவன் தந்தைபோல, அவரின் மடியில் ஒரு பெண் குழந்தை. பின் சீட்டில் ஒரு சிறுவன் உட்பட மூன்றுபேராவது இருக்கும். அது மாலை ஐந்து மணி. எதிரில் நிறையை பள்ளிமாணவர்கள் வந்தார்கள். இத்தனை பேரையும்வைத்துக்கொண்டு சிறுவன் தன் திறமையை காட்டிகொண்டிருந்தான்.

அவர்கள் மீது எனக்கு அப்படி ஒரு கோபம் வந்தது (அனா ஒன்னும் பண்ணலை..ஹம்..!! )
என் ஓட்டுனர் சிறிதுநேரம் மலையாளத்தில் அவர்களை திட்டிகொண்டே வந்தார்.!!

அது எவ்வளவு ஆபத்தான விஷயம்? விடை கீழே....


இரண்டு நாட்கள் முன்பு புது-டில்லியில் பத்தாம் வகுப்பு மாணவன் Scorpio காரில், அதுவும் இரவு 12 மணிக்கு மேல், தன் நண்பர்களுன் சென்று எதிரே வந்த காரில் மோதி அதிலிருந்த குடும்பமே இல்லாமல் போனது.

இப்போது சிறுவன் சிறையில்! தந்தையின் பணத்தாலும், செல்வாக்காலும் வெளியில் வந்தாலும் இந்தக்கோர நிகழ்வு அவன் வாழ்க்கை முழுவதும் வருந்த வைக்கும் என்பது நிச்சயம்!!

மேலும் படிக்க கீழே சொடுக்கவும்
http://ibnlive.in.com/news/teen-arrested-in-delhi-road-accident-case/80561-3.html

இதனை தடுக்க வேண்டிய நம் சட்டத்தை பாருங்கள்..கேவலம்!!
http://ibnlive.in.com/news/delhi-road-accident-father-liable-for-3-month-jail/80635-3.html


இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாகி வருவது மிகவும் வருத்தத்திற்குரியது.

என்னதான் வசதி படைத்தவராக இருப்பினும் சிறுவர்களிடம் காரைக் கொடுக்கலாமா?
சிறுவன் கார் ஓட்டுவதை பெருமையாக நினைக்கிறார்கள் சில அறிவில்லாத பெற்றோர்கள்.
"விபரீதம் நடக்காதவரை இது போன்ற தவறுகள் மகிழ்விப்பது போல் மாயை தரும். அடுத்தவர் அறிவுரை கூட பொறாமையாகத்தான் தோன்றும்."


கார் ஓட்டுவது என்ன கம்ப சூத்திரமா, சிறு வயதிலிருந்து கற்றுக்கொடுக்க?

ஒரு வாரமோ இல்லை ஒரு மாதமோ போதுமே!


சிறு வயதில் கல்வி தவிர விளையாட்டு, இசை என செய்யக்கூடியவை எவ்வளவோ இறக்கிறது. அதை விட்டுவிட்டு பெரியவர்களின் காரியங்களில் இறங்கவைப்பது வீன்வேலைதான். சரி தானே?

சிறுவர்கள்...சிறுவர்களாக வாழட்டுமே!! மிகச்சில வருடங்கள் மட்டுமுள்ள அந்த வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?

Thursday, December 4, 2008

வரம்


சுற்றியுள்ள பொருட்களை கணக்கெடுக்கும்; நிறங்களைத் தேடும் கண்கள்,
காற்றில் மிதிவண்டி சுற்றும் கால்கள்,
வானத்தை தொட எத்தனிக்கும் கைகள்,
நாம் பேசினால் கூடவே தனக்கே உரிய "ங்கா..ங்கா.." ஊ..ஊ..." என
மென்மையான மழலைமொழியில் கூறும் பதில்கள்.

இவை அனைத்துக்கும் மேல் மெய்மறக்க வைக்கும் புன்னகை.

இதெல்லாம் ஏழு மணிநேர ரயில் பயணம் பின் நான்கு மணிநேர விமானப்பயணம் செய்து என் கைகளில் வந்து சேர்ந்த எங்கள் மூன்று மாத குழந்தையிடம் காண்கிறேன்.

தூங்கும் கோணத்திலும், இடது கையை உபயோகிப்பதிலும், ஏன் சோம்பல் முறிப்பதிலும் கூட என்னையே காண்கிறேன்.


உலக அதிசயங்கள் ஏழு என்பர். அனால், நான் ஒன்றே ஒன்று தான் என்பேன். அது, கருவாகி உயிராகி பூமியில் ஜனனம் செய்யும் குழந்தை ஒன்று மட்டும் தான்.


Wednesday, December 3, 2008

துபாய் புதிய விமானநிலையம்

திங்களன்று குடும்பத்தினரை அழைத்துவர துபாய் விமானநிலையத்தின் புதிய Terminal-3 சென்று வந்தேன். Emirates Airlines -க்காக கட்டப்பட்டது, உலகில் ஒரு தனி விமான நிறுவனத்திற்காக கட்டப்பட்ட Terminal -களில் மிகப்பெரியது.

நேரில் பார்த்தபோது மலைக்க வைத்தது.!! அப்போது பதிவுசெய்த புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக.