Saturday, September 13, 2008

ஓணம் கொண்டாட்டம் - சதயா விருந்து


ஓணம் பண்டிகையை முன்னிட்டு உடன் பணிபுரியும் நண்பர்களுடன் சதயா விருந்து ஏற்பாடு செய்திருந்தோம். பதினாறு உணவு வகைகள் தயார்செய்தோம்.

பாரம்பரிய முறையில் வாழை இலையில் பரிமாறினோம்.

இதோ எங்கள் விருந்தின் புகைப்படங்கள்...


பங்கேற்ற அனைவரும் தமிழர்கள். அண்டை மாநில விழாவாக இருந்தால் என்ன, விழா என்றாலே உற்சாகம் தானாக வரும் அல்லவா. அதனால் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.

அயல்நாட்டில் இருந்தாலும் நம் ஊரில் இருப்பது போன்ற உணர்வு அனைவரின் மனதிலும்.


நன்றி

உலகின் வித்தியாசாமான திருவிழாக்கள் - II

இந்த பதிவின் திருவிழா தாய்லாந்து நாட்டில் கொண்டாடப்படுகிறது. அது நமது கலாச்சாராத்தை சார்ந்தது கூட.1) திருவிழா : குரங்குகளுக்கு உணவளிக்கும் விழா ("Monkey Buffet Festival")
இடம் : "Pra Prang Sam Yot" கோவில், லோப்புரி மாநிலம், தாய்லாந்து.
நாள் : நவம்பர் மாத இறுதியில்
தோன்றல் : தெரியவில்லை.


விழா தினத்தன்று இந்த மிகப்பழமையான இந்து கோவிலின் முன் பலவகை பழங்களும் காய்கறிகளும் குரங்குகளுக்காக மேசைகளிட்டு வைக்கப்படும். குரங்குகள் உணவு உண்பதை விட அவை செய்யும் சேட்டைகளை காண மக்கள் கூட்டம் திரளும். குரங்குகள் கூடியிருப்பவர்களிடம் உள்ள பொருள்களையும் விட்டு வைக்காது. பிடுங்கி உண்பது அவைகளுக்கு குதூகலமான ஒன்று என்பது நாம் அறிந்தததே.


சிலர் விளையாட்டாக பழங்களை பெரிய பனிக்கட்டிக்குள் உறையவைத்து படைப்பர். புகைப்படம்கொடுத்துள்ளேன் பாருங்கள்.


இங்கே படைக்கும் உணவு எவ்வளவு தெரியுமா? சுமார் 2000 கிலோவிற்கும் மேல்.விழா பற்றிய குறும்படங்கள் கொடுத்துள்ளேன், குரங்குகளின் சேட்டைகளைகண்டு மகிழுங்கள்.

இந்த விழாவைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வருவது பழனி மலை தான்.

எனக்கு மிகவும் பிடித்த திருத்தலம். எங்கள் ஊரிலிருந்து இரண்டரை மணிநேரப்பயணம்தான் ஆதலால் அடிக்கடி குடும்பத்துடன் சென்று வருவோம். புளியோதரையும் தயிர் சாதமும் பாக்கு மட்டையில் கட்டிக்கொண்டுசெல்வோம்.
மலை ஏறும்போது "யானை பாதை"யில் தான் செல்வது வழக்கம். படிக்கட்டுகள் ஏறுவது கடினம் என்பதால் மட்டுமல்ல, யானைப் பாதையில்தான் nஅன்றாக வேடிக்கை பார்க்க முடியும் என்பதால் தான். மலைமேல் இருந்து பழனி நகரத்தையும் அதன்அருகாமையில் உள்ள ஏரியின் அழகையும் ரசிப்போம். வாகனங்களும் மக்களும் மிக சிறியதாகத் தெரியும். ஒவ்வொருவரும் அங்கேபார், இங்கேபார் எனசுட்டிக்காத்ட்இ மகிழ்வர். நாம் இப்போது நாடு விட்டு நாடு பறக்கிறோம் மிக உயரத்தில் இருந்தது உலகை ரசிக்கின்றோம். அனால் அப்போது எங்களுக்கு பழனி மலையேபெரியது.

அதைவிட முக்கியமாக குரங்குகளை யானை பாதையில் அதிகமாக இருக்கும், சேட்டைகளை காண மிக வசதியாக இருக்கும். அவை தாவி விளையாடுவதை காண மகிழ்ச்சியாக இருக்கும். நாம் உண்ணும் பொழுது குரங்குகள் சமயம்பார்த்து காத்திருக்கும், திடீரென பாய்ந்தது தட்டிக்கொண்டு செல்லும். சிலரின் கைப்பைகளைக்கூட உணவுப் பண்டம் என நினைத்து தட்டிச்செல்லும்.

சரி மீண்டும் தாய்லாந்து விழாவுக்கு வருவோம்.
குரங்குகளுக்காக இவ்வளவு பெரிய விழா எதற்க்காக?திருவிழா வரலாறு:

விஷ்ணுவின் அவதாரமான ராமன் தன்னுடைய நிகரற்ற சீடனான ஹனுமனுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்ய கொடுத்ததாக மக்கள் நம்புகின்றனர். அதானாலேயே ஹனுமனின் வானர வம்சத்திற்கு ஆண்டு தோறும் மரியாதை செய்யும் விதத்தில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

நன்றி ! விழாக்கள் தொடரும்.

எனது தமிழ்

நான் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழில் எழுதியது மிகக்குறைவு என்றே சொல்லலாம். கணிணியில் ஆங்கிலம் மட்டுமே உபயோகப்படுத்துகிறேன். என்றாவது ஒரு நாள் மற்றும் தமிழ் எழுத்துக்களை கணினித்திரையில் வரைந்து பார்த்து மகிழ்வேன், அதுவும் புதிய தமிழ் மென்பொருள் அல்லது அது சார்ந்த கருவிகள் கண்டால் மட்டும் தமிழ். வெளிநாட்டில் வசிப்பதால் செய்தித்தாளை கூட வலைத்தளத்தில் தான் படிக்க வேண்டும். சென்னையில் வசித்தபோதோ செய்திகளின் தரத்தை கொண்டு "Hindu" மட்டுமே வாங்கிப்படித்தேன். அவ்வப்போது விகடனும் குமுதமும் தமிழ் படிக்க வைத்தன. சென்னையில் இருந்து வீட்டிற்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தது அதுவும் தொலைப்பேசி இணைப்பு பெற்றபின் நின்றுவிட்டது. அதன்பின் தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் அறவே இல்லை. அதனால் ஆங்கிலம்.. ஆங்கிலம்...ஆங்கிலம் மட்டுமே எனது எழுத்து மொழியாக இருந்தது.

என்னதான் தினமும் தமிழில் பேசிக்கொண்டிருந்தாலும் சின்னத்திரையும்வெள்ளித்திரையும் பார்த்தாலும் அடிக்கடி எழுதாவிட்டால் நம்மை அறியாமலேயே நம் எழுதும் திறன் குறைந்துவிடும். அதற்கு நானே உதாரணம். ஒரு முறை எங்கள் வீட்டுத் திருமணம் ஒன்றில் காய்கறிகள் பட்டியல் எழுதும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. ஓம் வரையும் வரை எல்லாம் நலமே. சமையல்க்காரர் ஒவ்வொரு சாமானாக சொல்லத்துவங்கினார். அவர்சொல்பவை புரிந்தது, ஆனால் என் கை மட்டும் ஏனோ தடுமாறியது. நான்தான் 12 ஆண்டுகள் பள்ளியில் தமிழ் பயின்றவனாயிற்றே எதனால் இந்த தடுமாற்றம் என நினைத்தேன். எப்படியோ சமாளித்து அந்த பட்டியலை முடித்தேன். அடிக்கடி தமிழில் எழுதாவிட்டால் இப்படித்தான்.


அதில் இருந்து என்னை மாறுபடுத்தியது இந்த Blog என்ற ஊடகம் தான். இதன் மூலம் மற்றவர்களுக்கு பயன் உள்ளதோ இல்லையோ, நிச்சயம் எனக்கு உண்டு. எனது தமிழை மறக்காமல் இருக்க உதவுகின்றது. என்னால் முடிந்த அளவு எழுத முயல்கிறேன், காகிதத்தில் இல்லாவிட்டாலும் கணினியிலாவது. மேலும் நான் எழுத்து பிழை செய்யாவண்ணம் இந்த வலைத்தளத்தின் மொழிக் கருவிகள் காப்பாற்றுகின்றன.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிறு சிறு பதிவுகள் எழுத முயல்கிறேன்.

என்னதான் ஆங்கிலப்புலமை இருந்தாலும் தமிழில் எழுத முடியவில்லை எனில் நன்றாயிராது. எனவே
நீங்களும் தமிழில் எழுதுவதை விட்டுவிடாதீர்கள்.
நன்றி.
Wednesday, September 10, 2008

உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி

உலக விஞ்ஞானிகளின் பார்வை மொத்தமும் இன்றைக்கு பிரான்ஸ் நாட்டு எல்லையில் அதுவும் பூமிக்கு 300 அடி கீழே நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது.

அப்படி என்ன பெரிய ஆராய்ச்சி என கேள்வி எழுப்புகிறவர்கள், கிழே கொடுக்கப்பட்டுள்ள வலைப்பதிவுகளையும், படங்களையும் பாருங்கள். ஏன் என்றால் எனது அறிவியல் அறிவு உங்களுக்கு விளக்கிச்சொல்லும் அளவுக்கு இல்லை .


இந்த குறும் படத்தை பாருங்கள். விவரமாக, நமக்கு புரியும்படியாக கூறியிருக்கின்றனர்.
கீழே இருக்கும் வலைப்பக்கம் கூடுதல் விபரங்களை சொல்கின்றது. இது ஒரு ஆராய்ச்சி இல்லை பலவற்றையும் செய்கின்றனர். ATLAS, ALICE, CMS, LHCb என மிகபிரம்மாண்டமான இயந்திரங்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு வழியில் துப்பு துலக்குமாம்.

The Large Hadron Collider


இதன் மூலமாக பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என நினைக்கிறார்கள்.

  1. உலகம் எப்படி உருவாயிற்று ?
  2. SPACE மற்றும் TIME Dimension எப்படி இருக்கும் ?
  3. அணுக்களை விட மிகமிகச்சிறிய விஷயங்களான "God or Higgs Particle" என்ன ?
இது போல் நம் மூளைக்கு எட்டாத பலதும் இந்த ஆராய்ச்சியில் அடக்கம்.

பேச்சில் சொன்னால் புரியாதவங்களுக்கு பாட்டில் விளக்கியிருக்கிறார்கள். கீழே கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.

ஒரு பக்கம் இப்படி மர்மான விஷயத்தை பற்றி ஆராய்ச்சியும், அதன் முடிவில் என்ன புதுமையான கண்டுபிடிப்புக்கள் நிகழும் என எதிர்ப்பார்ப்புடன் மக்களும் இருக்க, இன்னொரு பக்கமோ இது தேவை இல்லாத ஆராய்ச்சி. இதனால பூமியில இருக்கின்ற உயிரினங்கள் அழிந்துவிடும். பூமியே காணாமல் போய்விடும். தயவு செய்து ஆராய்ச்சி நிறுத்துங்கள் என, வழக்கிட்டு வாதாடிக்கொண்டு இருக்கின்றனர்.

இன்றைக்கு காலை 9:30 மணிக்கு, வெற்றிகரமாக ஆராய்ச்சி துவங்கிற்று. இது வரைக்கும் சிக்கல்கள் எதுவும் இல்லை. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இது பற்றி உங்களுக்கு வேறு விவரங்கள் தெரிந்ததால் எனக்கும் அனுப்புங்கள், பொது அறிவை வளர்ப்போம்.

நன்றி.
Tuesday, September 2, 2008

உலகின் வித்தியாசமான திருவிழாக்கள் - I


நம் ஊர்களில் தைப் பொங்கல், தீபாவளி, ஆங்கில மற்றும் தமிழ் வருடப்பிறப்பு போன்ற விழாக்கள் மட்டுமே பிரபலம். ஆனால் உலக நாடுகளில் பல
வித்தியாசமான திருவிழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. நம்மவர்களுக்கு அவைகேலிக்கூத்து போல தோன்றும்.

அது போன்ற ஒரு விழா இந்த ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டில் நடந்தேறியது, அது "தக்காளி சண்டை" திருவிழா. அந்த செய்தி பார்த்து முடிக்குமுன் ஜப்பான் நாட்டில் சாம்பா திருவிழா நடந்தது.

வேறு என்னென்ன வித்தியாசமான திருவிழாக்கள் இருக்கின்றன என ஏன் ஒரு கூகிள் தேடல் விடக்க்கூடாது என்று தோன்றியது. அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு.


1) திருவிழா : La Tomatina "தக்காளி சண்டை"
இடம் : வேலன்சியா, ஸ்பெயின்
நாள் : ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை துவங்கி ஒரு வாரம்
தோன்றல் : 1945


திருவிழாவின்போது 20,000 - 40,000 மக்கள் கூடுவர். அருகில் உள்ள ஊர்களிலிருந்து பல லாரிகள் மூலம் தக்காளி கொண்டுவரப்படும். காலை பத்து மணிக்கு உயரமான வழுக்கு மரம் ஏறும் போட்டி துவங்கும். இப்போட்டியில் யாராவது வெற்றிகரமாக ஏறியபின் தக்காளி சண்டை துவங்கும். சரியாக ஒரு மணி நேரம் சண்டை நடைபெறும். பாதுகாப்புக்கு நீச்சல் கண்ணாடிகள் அவசியம்.

இந்த வருட திருவிழா ஆகஸ்ட் 27 அன்று நடந்தது.
தக்காளிச்சன்டையின் புகைப்படங்கள் சில ....

இதில் உள்ளூர் அதிகாரிகளுக்கு சிரமமே திருவிழாவிற்குபின் தான். ஊரை சுத்தப்படுத்துவதுதான் அவர்கள் தலைவலி. தீயணைப்பு வண்டிகள் பல தேவைப்படுமென்றால் யோசித்துப்பாருங்கள் .!!!


வரலாறு: இந்த திருவிழா தோற்றத்திற்கான காரணம் தெளிவாக இல்லை. ஆனால் பல கராணங்கள் கூறப்படுகின்றன

  • 1945 ல் ஒரு திருவிழா ( “giants and big-headeds”) ஊர்வலத்தின் பொது சில கிராமத்து சிறுவர்கள், தாங்களும் பங்கு கொள்ள முற்பட்டு தடுக்கப்பட்டார்கள். அவர்கள் ஊர்வலதினருடன் சண்டையிட்டனர். அருகில் இருந்த காய்கறி கடையிலிருந்த தக்காளி எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டார்கள். அதுவே ஆரம்பமாக கூறப்படுகின்றது.
  • ஒரு தக்காளி ஏற்றி வந்த சரக்குஉந்துக்கு விபத்து ஏற்ப்பட்டது. கிராமத்துவாசிகள் அதிலிருந்த தக்காளியை எடுத்து அடித்துக்கொண்டதில்துவங்கியதாகவும் கூறப்படுகின்றது. நின்று
  • மிகப்பிரபலமாக கூறப்படுவது, அரசு அதிகாரியை ஊர் மக்கள் தக்காளியால் அடித்தனர். அதனால் தான் தோன்றியதாக சொல்கின்றனர்.
காரணம் எதுவாக இருப்பினும், அதுவே ஒவ்வொரு வருடமும் வழக்கமாக மாறியது. ஐம்பதுகளில் அரசு தடை விதித்தது, மீறி வந்தவர்களை கெய்து செய்தது. 1955 ஆம் ஆண்டு மக்கள் தக்காளியை பெட்டியில் இட்டு சவ ஊர்வலம் நடத்தினர். ஆனாலும் மக்கள் கொண்டாடுவதை விடவில்லை. சில வருடங்களுக்கு பின்னர் அரசாங்க அங்கிகாரமும் கிடைத்தது.

தற்ப்போது சுற்றுலாப்பயணிகளை உலகெங்கிலும் இருந்து கவர்ந்திழுக்கும் அளவிற்கு பிரபலம்.

எல்லாம் சரி எவ்வளவு தக்காளி வீணாகும் என நினைக்கிறீர்களா? கொஞ்சம் தான் ! சும்மா 1,20,000 கிலோவுக்கும் மேல்!!!

மேலும் விழாக்கள் தொடரும்...