Saturday, September 13, 2008

எனது தமிழ்

நான் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழில் எழுதியது மிகக்குறைவு என்றே சொல்லலாம். கணிணியில் ஆங்கிலம் மட்டுமே உபயோகப்படுத்துகிறேன். என்றாவது ஒரு நாள் மற்றும் தமிழ் எழுத்துக்களை கணினித்திரையில் வரைந்து பார்த்து மகிழ்வேன், அதுவும் புதிய தமிழ் மென்பொருள் அல்லது அது சார்ந்த கருவிகள் கண்டால் மட்டும் தமிழ். வெளிநாட்டில் வசிப்பதால் செய்தித்தாளை கூட வலைத்தளத்தில் தான் படிக்க வேண்டும். சென்னையில் வசித்தபோதோ செய்திகளின் தரத்தை கொண்டு "Hindu" மட்டுமே வாங்கிப்படித்தேன். அவ்வப்போது விகடனும் குமுதமும் தமிழ் படிக்க வைத்தன. சென்னையில் இருந்து வீட்டிற்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தது அதுவும் தொலைப்பேசி இணைப்பு பெற்றபின் நின்றுவிட்டது. அதன்பின் தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் அறவே இல்லை. அதனால் ஆங்கிலம்.. ஆங்கிலம்...ஆங்கிலம் மட்டுமே எனது எழுத்து மொழியாக இருந்தது.

என்னதான் தினமும் தமிழில் பேசிக்கொண்டிருந்தாலும் சின்னத்திரையும்வெள்ளித்திரையும் பார்த்தாலும் அடிக்கடி எழுதாவிட்டால் நம்மை அறியாமலேயே நம் எழுதும் திறன் குறைந்துவிடும். அதற்கு நானே உதாரணம். ஒரு முறை எங்கள் வீட்டுத் திருமணம் ஒன்றில் காய்கறிகள் பட்டியல் எழுதும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. ஓம் வரையும் வரை எல்லாம் நலமே. சமையல்க்காரர் ஒவ்வொரு சாமானாக சொல்லத்துவங்கினார். அவர்சொல்பவை புரிந்தது, ஆனால் என் கை மட்டும் ஏனோ தடுமாறியது. நான்தான் 12 ஆண்டுகள் பள்ளியில் தமிழ் பயின்றவனாயிற்றே எதனால் இந்த தடுமாற்றம் என நினைத்தேன். எப்படியோ சமாளித்து அந்த பட்டியலை முடித்தேன். அடிக்கடி தமிழில் எழுதாவிட்டால் இப்படித்தான்.


அதில் இருந்து என்னை மாறுபடுத்தியது இந்த Blog என்ற ஊடகம் தான். இதன் மூலம் மற்றவர்களுக்கு பயன் உள்ளதோ இல்லையோ, நிச்சயம் எனக்கு உண்டு. எனது தமிழை மறக்காமல் இருக்க உதவுகின்றது. என்னால் முடிந்த அளவு எழுத முயல்கிறேன், காகிதத்தில் இல்லாவிட்டாலும் கணினியிலாவது. மேலும் நான் எழுத்து பிழை செய்யாவண்ணம் இந்த வலைத்தளத்தின் மொழிக் கருவிகள் காப்பாற்றுகின்றன.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிறு சிறு பதிவுகள் எழுத முயல்கிறேன்.

என்னதான் ஆங்கிலப்புலமை இருந்தாலும் தமிழில் எழுத முடியவில்லை எனில் நன்றாயிராது. எனவே
நீங்களும் தமிழில் எழுதுவதை விட்டுவிடாதீர்கள்.
நன்றி.












No comments: